Saturday 11 February 2017

தைரியமும்  திமிரும்
வீரமும்  வீராப்பும்
உடையவளாகவே
அவள்  தந்தை  அவளை
வளர்த்தார்...

பாரதி  கண்ட  புதுமைப்பெண்
என்ற  அளவிற்கில்லாமல்..
தன  தகப்பன்  ஆசைப்பட்ட
தைரியசாலியாகவே
திகழ்ந்தாள்..

அச்சம்  நாணம்  மடம்  பயிர்ப்பு..
பெண்ணிற்குரிய  பட்டியலில்
அச்சத்தை  நீக்கு  என்று
ஐந்து  வயதிலே
அவள்  அப்பா  அறிவுறுத்தினார்...

மனதால்  வலிமையுடையவள்
என  உணரவைத்தவர்
உடலால்  வலிமையற்றவள்
என்பதை  உரைக்க  மறந்துவிட்டார்...

அத்தனை  வலிமைகொண்டு
போராடியும்
அவர்களிடமிருந்து அவளால்
விடுபட முடியவில்லை...

சிற்றெறும்பு  கூட  சீண்டாமல்
செல்லமாக  வளர்ந்தவள்
இன்று சிதைந்துகிடக்கிறாள்
என  உணரும்  வேளையில்
அவள்  கண்கள்  கசிகிறது...

உடம்பு வலியைவிட
இதை  உணர்வது
அதிக வலி என உணர்கிறாள்...

தன்னை  சிதைத்தவனை
சிறையிலிட வேண்டும்
என  இதயம்   ஆசைப்பட்டது...

ஆயினும்..

தன் அண்ணனிடம்கூட  சிறுசண்டையிட்டு
வீழ்வதை  விரும்பாத
தன்  தந்தை
மொத்தமாக  தான்  வீழ்ந்ததை
எப்படி  ஏற்பார்  என  எண்ணிக்கொண்டே
அடுத்த நாள்  அலுவலகத்திற்கு
அவசர அவசரமாக புறப்பட்டாள்...

வாழ்க்கை  நிஜங்களுக்கும்
வீழ்த்த வேண்டும்  என்ற
இலட்சியத்திற்கு  இடையே
" சராசரி வாழ்க்கை  நிஜங்கள் "
ஜெயித்தது..
                       
                              -----வாழ்க்கை நிஜங்களுடன்
                              --------------ஸ்ருதி-----------------













தனக்கு  பிறக்கவிருக்கும்

பெண்  குழந்தையை

தன்  தந்தை

வளர்த்தார்  போல்

வளர்க்க  வேண்டும்  என்பதே

அவள்  ஆண்டுகால  இலட்சியம்……….

நடந்த  அவலங்களையும்

நடக்கவிருக்கும்   அவலங்களையும்

உணரும்  வேளையில்

கண்களை மூடி  கடவுளை

வேண்டினாள்...


" ஆண்  பிள்ளை  போதும்..." என்று...

                                       மறுக்க முடியா நிஜங்களுடன்
                                       ------------ஸ்ருதி-------------